செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு

கோவை மாவட்டத்தில் 1,418 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

Published On 2020-01-09 11:14 GMT   |   Update On 2020-01-09 11:14 GMT
கோவை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் உள்ள 9 லட்சத்து 70 ஆயிரத்து 609 ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,418 ரே‌ஷன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
கோவை:

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 5 லட்சம் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் உள்ள 9 லட்சத்து 70 ஆயிரத்து 609 ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,418 ரே‌ஷன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 1000 ரூபாய் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் பொங்கல் தொகுப்பாக வழங்கப்படுகின்றன.

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 88 ஆயிரத்து 923 பயனாளிகளுக்கு விலையில்லா சேலைகளும், 6 லட்சத்து 84 ஆயிரத்து 468 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும் வழங்கப்படுகிறது.

பொங்கல் தொகுப்பை வாங்குவதற்காக இன்று காலை முதலே மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பு, மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வாங்கி செல்கின்றனர். பொங்கல் தொகுப்பு வருகிற 12-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த ரே‌ஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை கலெக்டர் ராஜாமணி தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 70 ஆயிரத்து 609 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை அந்தந்த ரே‌ஷன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம். விடுபட்டவர்கள் 13-ந்தேதி பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதற்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டையின் எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அட்டவணை தயார் செய்து அந்தந்த ரே‌ஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

குடும்ப அட்டையை தொலைத்தவர்கள் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்த எண்ணிற்கு வரும் குறுஞ்செய்தி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம். இதுதொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஏதாவது புகார்கள் இருந்தால் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News