உள்ளூர் செய்திகள்
மணல் சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல தற்காலிக சாலை அமைக்க வேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

Published On 2022-05-05 09:26 GMT   |   Update On 2022-05-05 09:26 GMT
வெங்கச்சேரியில் புதிதாக மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக செய்யாற்றில் சுமார் 15ஆயிரம்  கனஅடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் செய்யாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே இருந்த  தரைப்பாலம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. தரைப்பாலம் இல்லாததால் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு  சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வெங்கச்சேரியில் புதிதாக மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

மாற்றுப்பாதை சரியாக அமைக்கப்படாமல் மணல் மேடாகவும், பல இடங்களில் பள்ளங்களாகவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்சி அளிக்கிறது.

காஞ்சிபுரம், உத்திரமேரூர் சென்று வரும் இருசக்கர வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அவ்வழியாக மெதுவாக ஊர்ந்து தடுமாறி செல்கின்றன. மேலும் பள்ளத்தில் கனரக வாகனங்கள் அவ்வப்போது சிக்கியும் வருகிறது.

எனவே தற்போது வாகனங்கள் செல்லும் மாற்றுப்பாதையில் தற்காலிகமாக சீரான சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News