செய்திகள்
நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் கவலையுடன் காத்திருக்கும் விவசாயிகள்.

நெல் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் திடீர் போராட்டம்

Published On 2021-02-19 11:07 GMT   |   Update On 2021-02-19 11:07 GMT
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. இங்கு சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல், உளுந்து, மணிலா, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் வியாபாரிகளால் கொள் முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல் அறுவடை தீவிரமாக உள்ளதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கடந்த சில வாரங்களாக நெல்வரத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நெல் கொள்முதலுக்கு வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கு ரூ.1,000 வரி விதிக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களுக்கே நேரடியாக சென்று நெல் கொள்முதல் செய்தாலும் இந்த வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் கிராமப்புறங்களில் நெல் கொள்முதல் செய்து வரி செலுத்தாத வாகனங்களை அதிகாரிகள் சிறைபிடித்து அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நேற்று நெல் கொள்முதல் செய்யாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் மூட்டைகளுக்கு எடை போடாமல் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது.

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று 1,500 நெல் மூட்டைகள் வரத்து இருந்தது. ஆனால் இந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் நெல் மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலேயே விவசாயிகள் காத்திருந்தனர்.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லை வியாபாரிகள் கொள்முதல் செய்யாத காரணத்தால் அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் தேக்கம் அடைந்தன. இதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை செஞ்சி போலீசார் சமாதானப்படுத்தினர். இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் வியாபாரிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வியாபாரிகள் நாளை முதல் (அதாவது இன்று) நெல்லை கொள்முதல் செய்வதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காலத்தில் நெல் கொள்முதலுக்கு வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 மாதமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டும் நெல் கொள்முதலுக்கு ரூ.100-க்கு ஒரு ரூபாய் என்ற வீதம் வரி செலுத்தி வந்தோம். தற்போது நாங்கள் கிராமப்புறங்களுக்கு சென்று நெல் கொள்முதல் செய்தாலும் வரி விதிப்பை கட்டாயமாக்கியுள்ளனர். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வியாபாரிகளின் போராட்டத்தினால் விவசாயிகளாகிய எங்களுக்குத்தான் பெரும் இழப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News