உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

செல்வமுத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2022-05-07 10:26 GMT   |   Update On 2022-05-07 10:26 GMT
திருச்சி தாராநல்லூர் வீரமாநகரம் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
திருச்சி:


திருச்சி தாராநல்லூர் வீரமாநகரம் புதுத்தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோவில் நண்பர்கள் குழு நடத்தும் 30-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நாளை (8-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, நாளை இரவு திருச்சி வெல்ல மண்டியிலிருந்து அம்மன் அலங்காரத்துடன் புஷ்ப வாகனத்தில் புறப்பட்டு வீதியுலா நடக்கிறது.

தொடர்ந்து கோவிலை அம்மன் வந்தடைகிறார். பின்னர் அம்மனுக்கு பூச்சொரில் விழா நடக்கிறது. இதில் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தாராநல்லூர் வீரமாநகரம் புதுத்தெரு நண்பர்கள் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். முன்னதாக விழாவையொட்டி நாளை காலை கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதேபோல், திருச்சி புத்தூர் புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் நாளை (8-ந்தேதி) 78-ம் ஆண்டு பால்குட காவடி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, மாலை 3 மணிக்கு திருக்காவேரி ஸ்ரீ அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம், காவடி, கரகம், அக்கினி சட்டியுடன் புறப்பட்டு, புத்தூர் நகர் வலம் வருகிறது.

இரவு ஸ்ரீமகா மாரியம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனை நடக்கிறது. 9-ந்தேதி மாலை 6 மணிக்கு மகா மாரியம்மன் கோவில் சன்னதியில் திருவிளக்கு பூஜையும், 10-ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு விடையாற்றி உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை புத்தூர் புதுத்தெரு விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News