உள்ளூர் செய்திகள்
சேவல் சண்டை

தமிழகத்தில் 25-ந்தேதி வரை சேவல் சண்டைக்கு தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-01-12 03:57 GMT   |   Update On 2022-01-12 03:57 GMT
தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரேம்நாத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலாம்வலசு கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் வெறும் கால்களில் சேவல் சண்டை நடத்த ஐகோர்ட்டில் அனுமதி பெறுகின்றனர். ஆனால், இந்த சேவல் சண்டைகளில் சட்டத்திற்கு புறம்பாக சேவல் கால்களில் கத்தியை கட்டி சண்டைக்கு விடுகின்றனர். இதனால் சேவல் சண்டைக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்து உள்ளது. கடந்த ஆண்டு நடந்த சேவல் சண்டையின் போது சேவல் கால்களில் கத்தியை கட்டி போட்டியை நடத்தியதில் கூட்டத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். இந்த ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது.

எனவே, இந்த கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஏற்கனவே சேவல் சண்டை நடத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சேவல் சண்டை நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கு வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News