உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க காத்து நின்ற கூட்டம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2022-01-12 10:42 GMT   |   Update On 2022-01-12 10:42 GMT
மதுரையில் மின்தடையால் கைரேகை எந்திரம் செயல்படாததால் ஏராளமான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மதுரை 


தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகியவை இடம் பெற்றுள்ளன.  பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடவே முழுநீள கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 1394 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 9,27,828 அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, அந்தந்த தெருக்களில் உள்ள 200 கார்டுதாரர்களுக்கு சுழற்சி முறையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன. 

எனவே பொதுமக்கள் டோக்கன்களில் உள்ள நாள், நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்புகளை நேரடியாக பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எல்லீஸ் நகர் பகுதியில் இன்று மின்தடை என்பதால் அந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை மெஷின்கள் இயங்கவில்லை.

எனவே இன்று அந்த கடைகளுக்கு வந்த பொதுமக்களிடம் “உங்களுக்கான பொருட்கள் நாளை வழங்கப்படும்“ என்று சொல்லி ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க கைரேகை தேவை இல்லை என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. இந்த நிலையில் கைரேகை மிஷின்கள் இயங்காததை காரணம் காட்டி பொங்கல் பொருட்கள் வழங்காமல் ஊழியர்கள் திருப்பி அனுப்புவது ரேஷன் கார்டுதாரர்களை வேதனையடைய செய்தது.

Tags:    

Similar News