செய்திகள்
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்படும் - ராஜ்நாத்சிங் உறுதி

Published On 2020-10-01 23:51 GMT   |   Update On 2020-10-01 23:51 GMT
விவசாயிகளுக்கு எதிரான எதையும் மோடி அரசு செய்யாது. இனிவரும் ஆண்டுகளிலும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சில விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விவசாயிகளின் கவலையை போக்கும்வகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஒரு விவசாயி மகன். நான் உறுதியாக சொல்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான எந்த காரியத்தையும் மோடி அரசு செய்யாது.

விவசாய அமைப்புகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எங்களிடம் நேரில் வந்து பேசலாம் என்று அழைப்பு விடுக்கிறேன். சந்தேகங்களையும், கவலைகளையும் போக்குவதற்காக விவசாய அமைப்புகளுடன் நான் ஏற்கனவே பேசத் தொடங்கிவிட்டேன்.

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும் என்று உறுதி அளிக்கிறேன். அத்துடன், இனிவரும் ஆண்டுகளில், அந்த விலை தொடர்ந்து உயர்த்தப்படும்.

டெல்லி இந்தியா கேட் அருகே போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார், டிராக்டரை எரித்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு எப்படி ஆயுதங்கள் புனிதமானதோ, அதுபோல், விவசாயிகளுக்கு டிராக்டர் புனிதமானது.

அதை எரித்ததன் மூலம், விவசாயிகளை அவர்கள் இழிவுபடுத்தி உள்ளனர்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
Tags:    

Similar News