செய்திகள்
கோவில் பணியாளர்களிடம் அமைச்சர் கேசர்பாபு குறைகளை கேட்டறிந்தபோது எடுத்தபடம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published On 2021-07-24 12:29 GMT   |   Update On 2021-07-24 12:33 GMT
சிறிய கோவில் முதல் அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் படிப்படியாக நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு  நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள கோவில்களில் 12 ஆண்டு களுக்கு ஒரு முறை குட முழுக்கு நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து குடமுழுக்கு  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்களின் குறைகளை கேட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.கோவில் நிலங்களுக்கு முறையாக வாடகை செலுத்தாதவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு  நிலங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவில்களில் தூய்மைப் பணி, தேர்கள் சீரமைப்பு, தெப்பக்குளங்கள் புனரமைப்பு ஆகிய பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அனைத்து கோவில்களிலும் ஒருகால பூஜையாவது  நடத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு ஆன்மீக மக்களின் பொற்காலமாக இருக்கும். தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களை விட வசதியுள்ளவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை முதலில் கைப்பற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 75 நாட்களில் தினமும் 2 இடங்கள் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இடங்களை  மீட்டுள்ளது.
சிறிய கோவில் முதல் அனைத்து கோவில் களிலும்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் படிப்படியாக நடந்து வருகிறது.

அவை 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தி.மு.க தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், கலெக்டர் எஸ்.வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர பொறுப்பாளர் நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News