செய்திகள்
பாஜக தலைவர்கள் (அமித்ஷா, நரேந்திரமோடி)

’நான் இறந்தாலும் பாஜகவில் சேரமாட்டேன்’ - எம்.பி. சௌகதா ராய் பேச்சு

Published On 2020-11-21 15:53 GMT   |   Update On 2020-11-21 15:53 GMT
நான் இறந்தாலும் பாஜகவில் சேரமாட்டேன் என திரிணாமுல் காங்கிரஸ் சௌகதா ராய் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

அந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தற்போதே தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது.  

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேற்குவங்காளத்தை சேர்ந்த பாஜக எம்.பி. அர்ஜூன் சிங், ’ சௌகதா ராய் உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் அவர்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூடிய விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.



இந்நிலையில், பாஜக எம்பி. அர்ஜூன் சிங்கின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சௌகதா ராய் கூறியதாவது:-

பாஜக எம்பி அர்ஜூனின் கருத்துக்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் ஈடுபடுவதில் அர்ஜூன் ஒரு பாகுபலி. அர்ஜூன் பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.

நானும் பாஜகவில் இணைய வரிசையில் நிற்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நான் கூறுவது என்னெவென்றால் நான் இறந்தாலும் பாஜகவில் சேரமாட்டேன்.

என்றார்.
Tags:    

Similar News