ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் தொடக்கம்

Published On 2019-12-24 03:51 GMT   |   Update On 2019-12-24 03:51 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜனவரி 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பூலோக வைகுண்டம் எனவும், 108 வைண தலங்களில் முதன்மையானது எனவும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சொர்க்கவாசல் திறப்பன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு கோவில் கர்ப்ப கிரகத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பமாகும். இரவு 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகமும், அபிநயமும், வியாக்யானமும் நடைபெறும். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனமும் நடைபெறும்.

திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம் இரவு 10.30 மணி முதல் இரவு 11 மணி வரையும், இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை தீர்த்த கோஷ்டியும் நடைபெறும். நாளை மறுநாள் சூரிய கிரகணத்தை முன்னிட்டு பகல் 1.15 மணி வரை மூலஸ்தான சேவை இல்லை. பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை சேவை உண்டு. மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

பகல் பத்து வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 8.15 மணி முதல் பகல் 1 மணி வரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெறும். பகல் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயக்காரர் மரியாதை பொது ஜன சேவையுடன் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

இதேபோல பகல் பத்தில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல் பத்து ஜனவரி மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 6-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவில் திருக்கைத்தல சேவை வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. மற்றொரு முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறும். நம்மாழ்வார் மோட்சத்துடன் வருகிற 16-ந் தேதி விழா முடிவடைகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில் கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News