உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருக்குறுங்குடி மலையில் மந்தமான முறையில் நடக்கும் சாலை பராமரிப்பு பணிகள்

Published On 2022-05-06 09:57 GMT   |   Update On 2022-05-06 09:57 GMT
திருக்குறுங்குடி மலையில் மந்தமான முறையில் சாலை பராமரிப்பு பணிகள் நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோவில் உள்ளது.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து செல்லும் 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதையில் நடந்து மட்டுமே செல்ல முடியும்.

மேலும் தனியார் ஜீப்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே திருமலைநம்பி கோவில் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் செலவில் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது.

இதனால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பணிகள் 2 வாரத்திற்குள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவித்தனர்.

இந்நிலையில் சாலை பராமரிப்பு பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடப்பதாக பக்தர்கள் புகார் கூறினர். இதை உறுதிபடுத்தும் விதமாக 2 வாரங்களுக்குள் பணிகள் முடிவடையும் என்று வனத்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

எனவே திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல மேலும் 2 வாரங்கள் தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர்.

பல நாட்கள் கோவில் மூடப்பட்டும் இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் நிம்மதியுடன் கோவிலுக்கு சென்று வந்த வேளையில், சாலை பராமரிப்பு பணியால் மீண்டும் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே சாலை பராமரிப்பு பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் பக்தர்களின் வாகனங்களும் கோவில் வரை செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News