லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் நீரிழிவு நோய்

பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் நீரிழிவு நோய்

Published On 2021-05-29 04:47 GMT   |   Update On 2021-05-29 04:47 GMT
பெண்களுக்கு மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். அதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்தாலும், பல்வேறு உடல்நல சிக்கலையும் எதிர்கொள்கிறார்கள். மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்தின் மூலம் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டாக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது. எனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.
Tags:    

Similar News