செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம்

Published On 2021-02-27 03:09 GMT   |   Update On 2021-02-27 03:09 GMT
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று வருகை தரும் ராகுல்காந்தி கலந்துரையாடல், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தூத்துக்குடி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வக்கீல்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரோடு ஷோ மூலம் மக்களிடையே நடந்து சென்று ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பள தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து மாலையில் நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்காந்தி இட்டமொழி, மன்னார்புரம் விலக்கு, பரப்பாடி வழியாக சென்று, நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இரவில் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். பின்னர் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திறந்தவேனில் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு மக்களிடையே பிரசாரம் மேற்கொள்கிறார்.

பின்னர் நெல்லையில் இருந்து கார் மூலம் ஆலங்குளம், சுரண்டை பகுதிகளுக்குச் சென்று பீடி தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். இரவில் குற்றாலத்தில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் ராகுல்காந்தி குற்றாலத்தில் இருந்து கடையத்துக்கு சென்று ரோடு ஷோ முறையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து அம்பை, சேரன்மாதேவி, வள்ளியூரில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பின்னர் நாகர்கோவிலுக்கு செல்கிறார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் காங்கிரசார் வரவேற்பு பேனர்கள், கட்சிக்கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் அமைத்துள்ளனர். ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
Tags:    

Similar News