செய்திகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுவையில் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறக்க கவர்னர் தமிழிசை அனுமதி

Published On 2021-04-11 10:35 GMT   |   Update On 2021-04-11 10:35 GMT
முதல் நாள் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிகின்றனரா என்று பார்த்துள்ளோம். இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

புதுச்சேரி:

புதுவை கவர்னர் மாளிகையில் அனைத்து மத தலைவர்களுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் மத தலைவர்கள் பலர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து சமைய பெரியவர்களுடனும் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆலோசனை நடத்தினோம். அவர்கள் தடுப்பூசி திட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.

வருகிற 14-ந் தேதி வரை 93 பள்ளிகள், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

ரமலான், தமிழ் புத்தாண்டு, சித்திரை மாத விழாக்களையொட்டி வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம்.

அதே வேளையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க கோரிக்கை வைத்து இரவு 8 மணி வரை என்பதை 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக 2 மணி நேரம் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பாக பக்தியை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிகின்றனரா என்று பார்த்துள்ளோம். இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

Tags:    

Similar News