செய்திகள்
சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் பிளஸ்-2 மாணவி சுட்டுக்கொலை

Published On 2019-11-28 06:50 GMT   |   Update On 2019-11-28 06:50 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிளஸ்-2 மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்களும், பொது மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் மோரேனா பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி ரத்தோர். போர்சா நகரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று மாலை அஞ்சலி ரத்தோர் தனது தோழிகளுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மாணவி அஞ்சலி ரத்தோரை சரமாரியாக சுட்டார்.

பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அஞ்சலி ரத்தோரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவியை சுட்டுக் கொன்ற வாலிபரை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது உறவினர்களும், பொது மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவி சுட்டு கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News