செய்திகள்
திருநெல்வேலி தொகுதி

அதிமுக- திமுக நேருக்குநேர் மோதும் நெல்லை தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-07 07:50 GMT   |   Update On 2021-03-07 07:50 GMT
அதிகமுவும், திமுகவும் தலா ஆறு முறை வெற்றிபெற்றுள்ள திருநெல்வேலி தொகுதி குறித்து ஓர் பார்வை
நெல்லை சட்டமன்ற தொகுதி பாரம்பரியம் மிக்க பழமை வாய்ந்த தொகுதியாகும். இங்கு பல தலைவர்கள் போட்டியிட்டு அமைச்சராகி உள்ளனர். இதில் ஜி.ஆர். எட்மன்ட், நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

நெல்லை சட்டசபை தொகுதியில் தற்போது டவுண் பகுதி, தச்சநல்லூர், பேட்டை, சுத்தமல்லி, கல்லூர், மானூர், அழகியபாண்டியபுரம், கங்கைகொண்டான், தாழையூத்து, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் ஆகியவை முக்கிய பகுதிகளாக உள்ளது.



இந்த தொகுதியில் நகர்புறங்கள் எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப கிராமப்பகுதிகளும் அடங்கி உள்ளது.புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில், ராஜவல்லிபுரம் செப்பறை கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், தென்திருப்பதி என்றழைக்கப்படும் நரசிங்கநல்லூர் பெருமாள் கோவில் ஆகியவை நெல்லை சட்டமன்ற தொகுதியில் உள்ளன.



வேலைவாய்ப்பிற்காக புகழ்பெற்ற சிமெண்ட் ஆலை, குளிர்பானக் கம்பெனிகள், சுண்ணாம்பு கம்பெனிகள், கல்குவாரிகள் பல இங்கு அமைந்துள்ளது. எவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதோ அதைவிட அதிகமாக விவசாய நிலப்பரப்புகளும் உள்ளன. இதில் நெல், வாழை, உளுந்து ஆகியவை முக்கிய பயிர்களாக பயிரிடப்படுகின்றன.

இந்த தொகுதியில் அதிக அளவு தேவேந்திரகுல வேளாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தேவர்களும், பிள்ளைமார்களும், யாதவர்களும் உள்ளனர். இங்கு இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தேவேந்திரகுல வேளாளர்களும் கணிசமாக உள்ளனர். நாடார், ஆசாரி உள்பட மற்ற சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்..



இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் தேர்தல் சந்தித்த போதே நெல்லை சட்டமன்ற தொகுதி உள்ளது. 1957 தேர்தலில் இரட்டை உறுப்பினர்களான காங்கிரசை சேர்ந்த ராஜாத்தி குஞ்சிதபாதம், சேர்ந்தமரம் (தனி) ஆகியோர் எம்.எல்.ஏ.வாக பணிபுரிந்துள்ளனர். 1967-ல் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது நெல்லையில் இருந்து இளைஞரான ஏ.எல். சுப்பிரமணியன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக இருந்தார். அதன்பிறகு இந்த தொகுதியில் பலமுறை தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1967-ல் இருந்து இதுவரை 12 பொதுத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் அ.தி.மு.க. 6 முறையும் தி.மு.க. 6 முறையும் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் இங்கு தி.மு.க. சார்பாக போட்டியிட்ட ஏ.எல்.எஸ். லட்சுமணன் 601 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

2016- சட்டசபை தேர்தலுக்கு முந்தைய தேர்தல் வரை நெல்லை சட்டசபை தொகுதியில் யார் வெற்றி பெற்றார்களோ, அந்த கட்சியை தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் ஏ.எல்.எஸ். லட்சுமணன் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வே ஆட்சி அமைத்தது.



தற்போது நெல்லை சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. நெல்லை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 91 ஆயிரத்து 156 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 272, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 829, திருநங்கை வாக்காளர்கள் 55.

கோரிக்கைகள்

நெல்லை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி நெல்லை சட்டமன்ற தொகுதியாகும். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் நெல்லை சட்டசபை தொகுதியின் மக்கள் பிரச்சினை பூதாகரமாக உள்ளது. மக்கள் தொகைக்கேற்ப இந்த தொகுதியில் சாலை வசதிகள் முற்றிலும் இல்லை. நெல்லை டவுனில் இருந்து பேட்டையை கடந்து சுத்தமல்லி செல்வதற்கே 40 நிமிடம் ஆகிவிடும். அந்த அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக உள்ளது.



இணைப்பு சாலைகள் திட்டம் அனைத்தும் பாதி முடிந்த நிலையில் அப்படியே உள்ளது. கடந்த 20 வருடங்களாக ‘ரிங்’ ரோடு வேண்டும் என்று கேட்டு இந்த பகுதி மக்கள் அலுத்து விட்டார்கள்.

எனவே வரும் தேர்தலில் இந்த சாலைப் பிரச்சினைகளை தீர்க்கும் வேட்பாளரே தங்களுக்கு வேண்டும் என்று உள்ளார்கள். நகர்புறங்களில் குடிநீர் பிரச்சினை இல்லாவிடிலும் புறநகர் பகுதி, கிராமப்பகுதிகளில் இன்றும் குடிநீர் பிரச்சினை உளளது. அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் நயினார்குளத்தில் படகுகுழாம் அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.

தேர்தல் வெற்றி



1952- ஆறுமுகம் மற்றும் ஸ்.என்.சோமையாஜூலு (காங்.)
1957- ராஜத்தி குஞ்சிதபாதம் (காங்.) சோமசுந்தரம்
1962- ராஜாத்தி குஞ்சிதபாதம் (காங்.)
1967- ஏ.எல்.சுப்பிரமணியன் (தி.மு.க.)
1971- பி.பத்மநாபன் (தி.மு.க.)
1977- ஜி.ஆர்.எட்மண்ட் (அ.தி.மு.க.)
1980- நாவலர் நெடுஞ்செழியன் (அ.தி.மு.க.)
1984- எஸ்.நாராயணன் (அ.தி.மு.க.)
1986- ஆர்.எம்.வீரப்பன் (இடைத்தேர்தல்)அ.தி.மு.க.
1989- ஏ.எல்.சுப்பிரமணியன் (தி.மு.க.)
1991- டி.வேலையா (அ.தி.மு.க.)
1996- ஏ.எல்.சுப்பிரமணியன் (தி.மு.க.)
2001- நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.)
2006- மாலை ராஜா (தி.மு.க.)
2011- நயினார்நாகேந்திரன் (அ.தி.மு.க.)
2016 - ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (தி-.மு.க.)
Tags:    

Similar News