செய்திகள்
பாகிஸ்தானிய மக்கள்

நாடு தவறான பாதையில் செல்கிறது... 87 சதவீத பாகிஸ்தான் மக்கள் கருத்து

Published On 2021-11-24 10:20 GMT   |   Update On 2021-11-24 10:20 GMT
நாடு தவறான பாதையில் செல்கிறது என பாகிஸ்தானியர்களில் 87 சதவீதம் பேர் ஐபிஎஸ்ஓஎஸ் பாகிஸ்தான் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ஐபிஎஸ்ஓஎஸ் ஆய்வு நிறுவனம் நடத்தய நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிட்டது.

அதில் பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 1,100 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கருத்துகணிப்பில் பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர் பாகிஸ்தானின் பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதாகவும், 43  சதவீதம் பேர் பணவீக்கம் தான் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, 14 சதவீதம் பேர் பாகிஸ்தானில் வேலையின்மை முதன்மையான பிரச்சினையாக உள்ளதாகவும், 12 சதவீதம் பேர் வறுமை பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த 49 சதவீதம் பேர் பொருளாதார நிலை அப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளனர். ஆனால் 46 சதவீதம் பேர் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதாகவும், வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் பொருளாதார நிலை வலுவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த 6 மாதங்களில் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, ​​64 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்றும், 12 சதவீதம் பேர் பொருளாதார மேம்பாட்டில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், 24 சதவீதம் பேர் இதில் நம்பிக்கையோ அல்லது ஏமாற்றமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் தனிப்பட்ட நிதி நிலைமை குறித்து கேட்டபோது,  47 சதவீதம் பேர் பலவீனம் மற்றும் நிலையற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 5 சதவீதம் பேர் வலுவாக உள்ளதாக பதிலளித்துள்ளனர். இருப்பினும், 48 சதவீதம் பேர் தங்கள் தனிப்பட்ட நிதி நிலை பலவீனமாகவும் இல்லை அல்லது வலுவாகவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

நாடு தவறான பாதையில் செல்கிறது என பாகிஸ்தானியர்களில் 87 சதவீதம் பேர் நம்புவதாக கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதம் கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவில் அதிகமாக உள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News