செய்திகள்
மழை

தர்மபுரியில் தொடர்மழை: அரூர்-சித்தேரி சாலையில் மண்சரிவு

Published On 2020-09-15 09:32 GMT   |   Update On 2020-09-15 09:32 GMT
தர்மபுரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் அரூர்- சித்தேரி செல்லும் மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறைகள் சரிந்து விழுந்தன.
அரூர்:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி பகுதியில் சித்தேரி, பேரேரிபுதூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட 62 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள், கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி அரூர்- சித்தேரி செல்லும் மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய பாறைகள் சரிந்து சாலையோரம் விழுந்து கிடந்தன.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மண்சரிவு, பாறைகள் விழுவும் வாய்ப்பு உள்ளது.

இதனால் அதிகாரிகள், உடனடியாக சாலையோரம் விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்றவும், மண்சரிவுகள் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News