ஆன்மிகம்
திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசை: போலீஸ் தடையை மீறி திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-10-06 07:39 GMT   |   Update On 2021-10-06 07:39 GMT
மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் அய்யங்குளக்கரையில் உள்ள குருக்கள் வீடுகளில் இன்று தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தர்ப்பணம் செய்து கொள்வது வழக்கம். இன்று மகாளய அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் “பொதுமக்கள் யாரும் அய்யங்குளக்கரையில் தர்ப்பணம் செய்ய வரவேண்டாம். இந்த கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் “என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் இந்த உத்தரவுகளை கண்டு கொள்ளாமல் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் இன்று அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். அவர்கள் குளக்கரையில் வேத விற்பனர்கள் மந்திரம் சொல்ல தங்களதுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர். பின்னர் அருகில் உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள் அய்யங்குளத்தில் சென்று நீராடுவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை குளத்தின் நான்கு பக்கமும் உள்ள மதில் சுவர் இருப்பு கேட் மூடப்பட்டு பூட்டுகள் போடப்பட்டன.

அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த குளம் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் அதில் குளிக்க முடியாது என்று பொதுமக்கள் வேறு இடங்களில் குளித்து விட்டு வந்தனர்.அவர்கள் தயாராக இருந்த வேதவிற்பனர்களிடம் தங்களது முன்னோர் பெயர் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை  தெரிவித்து தர்ப்பணம் செய்து கொண்டனர்.

வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். போலீஸ் மற்றும் கலெக்டர் தடை உத்தரவு காரணமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுவிடுமோ? என்று பொதுமக்கள் கருதிய நிலையில் அய்யங்குளக்கரையில் உள்ள குருக்கள் வீடுகளிலும் இன்று தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி குருக்கள் வீடுகளிலும் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு போலீசார் அங்கு வராததால் எந்தவித தடையும் இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் முன்னோர்களுக்கு தடையின்றி தர்ப்பணம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News