செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-10-17 03:00 GMT   |   Update On 2020-10-17 03:00 GMT
திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் கூறியுள்ளார்.
முருகபவனம்:

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய கடந்த மே மாதம் நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் 2 நவீன எந்திரங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை 24 மணி நேரமும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி நாள்தோறும் சுமார் 1,300 பேருக்கு இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதுரை, தேனி, கரூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முயற்சியால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த நவீன ஆய்வகத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 4,400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவரிடமிருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்ட 12 முதல் 20 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையொட்டி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், அவர் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் துரிதமாக செய்யப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மேலும் குறைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

பழனி வட்டாரத்தில் கொரோனா தடுப்பு குறித்து சுகாதார பணிகள் உதவி இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:-

பழனி வட்டாரத்தில் உள்ள பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், அமரபூண்டி மற்றும் பழனி நகர் நல மையம் ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி நாள்தோறும் பழனி வட்டாரத்தில் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மருத்துவ அலுவலர்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 14 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News