செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

கொரோனா மருந்து பரிசோதனையில் பங்கேற்றவருக்கு ஏற்பட்ட நிலைமை- மனைவி குற்றச்சாட்டு

Published On 2020-12-02 06:12 GMT   |   Update On 2020-12-02 06:12 GMT
கொரோனா மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தனது கணவரால் சிறிய அளவிலான வேலையை கூட செய்ய முடியவில்லை என அவரது மனைவி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை:

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த மருந்தை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உற்பத்தி செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி சீரம் நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

இதை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் மருந்தை பயன்படுத்த வேண்டுமென்றால் அதன் 2-வது, 3-வது கட்ட சோதனைகள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும். அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மருந்துகளை தன்னார்வலர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தியது.

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் தன்னாவலர்களுக்கு மருந்தை வழங்கி சோதனை நடத்தினார்கள்.

இதன் 3-வது கட்ட சோதனையில் பலருக்கு மருந்து வழங்கப்பட்டது. அதில் 40 வயது மார்க்கெட்டிங் நிர்வாகி ஒருவரும் கலந்து கொண்டார்.

மருந்தை பயன்படுத்தியதற்கு பிறகு உடலில் பாதிப்புகள் கூடியிருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள். அதாவது மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தி உடல்நலத்தை பாதித்து இருக்கிறது என்று கூறினர்.

அத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தங்களுக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

இது சம்பந்தமாக சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆதர் புனவல்லா கூறும்போது, ‘‘மருந்தில் எந்த குறைபாடும் இல்லை. அது சிறப்பாக வேலை செய்கிறது. ஏற்கனவே பரிசோதனை செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட நபர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். எங்கள் நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது’’ என்று கூறினார்.

மேலும் அவரிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் அந்த தன்னார்வலரின் மனைவி ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமும் எங்களுக்கு கிடையாது. எனது கணவருக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்ததுமே அவருடைய உடலில் பாதிப்புகள் தென்பட்டன.

அவர் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு திறமையாளர். ஆனால் மருந்தை பயன்படுத்தியதில் இருந்து அந்த திறனை இழந்து விட்டார். அவரால் இப்போது ஒரு சிறிய வேலையை கூட செய்ய முடியவில்லை.

ஆன்லைனில் பணத்தை செலுத்துவது கூட முடியாத காரியமாக இருக்கிறது. அவர் அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அக்டோபர் மாதம் 1-ந் தேதி அவருக்கு புராஜெக்ட் வழங்கப்பட்டிருந்தது. அதை அவரால் செய்ய முடியவில்லை. இதனால் அவர் வேலையை இழந்து விட்டார். அமெரிக்க வேலையில் மிகவும் வேகமாக பணியாற்ற வேண்டும். அதை அவரால் செய்ய முடியவில்லை.

மருந்தை பயன்படுத்தியதில் இருந்து உடல்திறன் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் பெற வேண்டும் என்ற எண்ணம் எதுவுமில்லை.

ஆனால் அந்த நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் பயன்படுத்த இருக்கிறார்கள். இது மக்களை பாதித்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும், மக்களுக்கு இது தெரியவேண்டும் என்ற எண்ணத்திலும்தான் நாங்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.

எனது கணவர் இப்போது நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News