செய்திகள்
மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி சன்மானம் வழங்கிய போது எடுத்தபடம்.

கத்தியுடன் மிரட்டிய கொள்ளையனை பிடித்த போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டு

Published On 2021-09-10 08:40 GMT   |   Update On 2021-09-10 08:40 GMT
கையில் பட்டன் கத்தியை வைத்து அனீஸ் குமார் தலையில் அடித்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அனீஸ் குமார். பெயின்டிங் கான்ட்ராக்டரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வாங்குவதற்காக உடுமலைக்கு செல்ல திட்டமிட்டார். 

இதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தார். இங்கிருந்து உடுமலை செல்ல தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது கார் வாங்க வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கீழே கொட்டியது. 

அதிர்ச்சி அடைந்த அனீஸ்குமார் சுற்றி பார்த்தபோது அருகில் இருந்த நபர்  பிளேடை பயன்படுத்தி பாக்கெட்டை கிழித்தது தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்றநிலையில் அந்த நபர் கையில் பட்டன் கத்தியை வைத்து அனீஸ் குமார் தலையில் அடித்துள்ளார். 

இதில் பயந்துபோன அணிஸ்குமார் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் விக்னேஸ்வரன் விரைந்து வந்து அந்த நபருடன் போராடி மடக்கி பிடித்தார். பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்ததில் அவர் மோகனசுந்தரம் என்ற தாடி மோகன் என்பதும். அவர் மேல் பல்வேறு பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 

இதனையடுத்து மோகன சுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார். கையில் கத்தியுடன் மிரட்டிய நபரை தன் உயிரை பணயம் வைத்து பிடித்து பணத்தை உரியவரிடம் மீட்டுக்கொடுத்த போக்குவரத்துக் காவலர் விக்னேஸ்வரனை திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ரவி சன்மானம் வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News