செய்திகள்
வாட்ஸ்அப்

சொத்து பிரச்சினையில் உறவினர் சித்திரவதை- வாட்ஸ் அப்பில் உதவி கேட்டு குமுறி அழுத கல்லூரி மாணவி

Published On 2020-09-15 14:24 GMT   |   Update On 2020-09-15 14:24 GMT
சொத்து பிரச்சினையில் உறவினர் சித்திரவதை செய்வதாக வாட்ஸ் அப் மூலம் உதவி கேட்டு குமுறி அழுத கல்லூரி மாணவி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழித்துறை:

குமரி மாவட்டத்தில் உள்ள பலரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு நேற்று காலை முதல் ஒரு மாணவியின் அழு குரலுடன் கூடிய தற்கொலை ஆடியோ வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் பேசிய மாணவி தனது பெயர் மற்றும் குடும்ப நிலவரம் ஆகியவற்றை கூறி சொத்துக்காக தங்களை உறவினர் ஒருவர் வீடுபுகுந்து அடிக்கடி மிரட்டி சித்திரவதை செய்வதாகவும், இதனால் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் கூறி குமுறி அழுதார்.

இந்த கண்ணீர் வாட்ஸ்- அப் ஆடியோவை சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் உள்ள போலீசார் பார்த்துள்ளனர். அந்த மாணவி கூறிய முகவரி மூலம் அவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை பகுதி இலவிளையை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டனர்.

உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் படி சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து நாகர்கோவில் போலீஸ் எஸ்.பி. அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இலவிளையில் உள்ள அந்த மாணவியின் வீட்டிற்கு மார்த்தாண்டம் போலீசார் சென்றனர். அப்போது அவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி என்பது தெரிய வந்தது.

தந்தை இறந்துவிட்டதால் தாயார் அருகில் உள்ள பள்ளி சத்துணவு கூடத்தில் ஆயாவாக வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவர்களுக்கு உரிய 12 சென்ட் நிலம் தொடர்பாக சித்தப்பா குடும்பத்தினருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக சித்தப்பா மகன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்ததுடன் அவர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளார். இதில் தங்களுக்கு யாரும் உதவாததால் தாய் தவிப்பதை கண்டு வேதனையடைந்த கல்லூரி மாணவி வேறு வழியில்லாமல் தாயுடன் தற்கொலை முடிவை எடுக்க துணிந்தார்.

முன்னதாக அவர் தனது தாயின் நிலை குறித்து வாட்ஸ்-அப்பில் ஆடியோ வெளியிட்டார். அனைவரும் இதை பங்கிடுங்கள் நாகர்கோவில் கலெக்டர் கவனத்திற்கு இது செல்லட்டும் என்று அதில் வேண்டுகோளும் விடுத்திருந்தார். ஆனால் அந்த வாட்ஸ்-அப் ஆடியோவை அதிர்ஷ்டவசமாக சென்னை போலீசார் கேட்டதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி கல்லூரி மாணவியை தேடி கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

அதன்பிறகு கல்லூரி மாணவிக்கு தற்கொலை தடுப்பு குழு மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதோடு மாணவி குடும்பத்திற்கு டார்ச்சர் கொடுத்த உறவினரை அழைத்து அறிவுரை வழங்கிய போலீசார் அவரிடம் இனிமேல் மாணவி குடும்பத்தை தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதி பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குமரி மாவட்டம் மற்றும் குழித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக களத்தில் இறங்கியதால் ஒரு மாணவியின் தற்கொலை தடுக்கப்பட்டது. இனி தமக்கு தொந்தரவு இருக்காது என மாணவி மகிழ்ச்சியுடன் உள்ளார்.

Tags:    

Similar News