லைஃப்ஸ்டைல்
மனநல முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டியவை

மனநல முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டியவை

Published On 2021-09-03 04:29 GMT   |   Update On 2021-09-03 04:29 GMT
மன நல முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்? அதனை ஏன் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, காயம் அடைந்தாலோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக அவசர முதலுதவி செய்வதற்கு வீட்டில் முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். அதுபோலவே மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது அதிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறுவதற்கும் சிறப்பு முதலுதவி பெட்டி கைவசம் இருக்க வேண்டும். அந்த மன நல முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்? அதனை ஏன் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

மன நிலையை சட்டென்று மேம்படுத்துவதற்கு இசை உதவும். ‘மியூசிக் தெரபி’ மனச்சோர்வை சமாளிப்பதற்கான சிறந்த உத்தி என்றும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தி கவனத்தை ஓரிடத்தில் குவிக்க உதவும் என்றும் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. மன அழுத்தத்தில் இருக்கும்போது எந்தவொரு செயலிலும் ஆர்வமாக ஈடுபட முடியாது. அந்த சமயத்தில் சிறிது நேரம் இசையை கேட்பது மன அழுத்த அளவை குறைக்க உதவும். மேலும் இசை மீது நாட்டம் கொள்வது கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு எதிராக மேஜிக் போல் மந்திர ஜாலம் புரியக் கூடியது. அதனால் மனநல முதலுதவி பெட்டியில் தவறாமல் ஹெட்போனை இடம்பெற செய்யுங்கள்.

செல்போனில் மட்டுமின்றி கையடக்க நோட்டு ஒன்றிலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் தொலை பேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

சில நண்பர்கள் நீண்ட காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கலாம். நெருங்கி பழகியவர்களுடன் பிரிவை சந்திந்த பிறகு அவர்களுடனும் நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கலாம். அவர்களின் நம்பர்களை நோட்டில் எழுதி வைத்திருந்தால், அதனை புரட்டிப்பார்க்கும்போது உடனே தொடர்பு கொண்டு பேசுவதற்கு நினைவூட்டும். அவர்களுடன் மொபைல் போனில் பேசுவதற்கு பதிலாக நேரில் சந்தித்து சில மணி நேரங்களை செலவிடலாம். அது மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

மன நல உதவி பெட்டியின் ஒரு பகுதியாக பேனா மற்றும் டைரி கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் எதிர்மறையான சிந்தனைகள், எண்ணங்கள் தலைதூக்கும்போது உங்கள் பிரச்சினைகளை டைரியில் எழுதி வைக்கலாம். அந்த சமயத்தில் உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அது அமையும். இயல்பான மன நிலையில் இருக்கும்போது அதனை படித்து பார்க்கலாம். அந்த சமயத்தில் வெளிப்பட்ட உணர்வு களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமையும். மன அழுத்தத்தில் இருக்கும்போது டைரி படிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். கடந்த கால நினைவுகளை அசை போடும்போது மனம் இலகுவாகும்.

நறுமணம் கமழ செய்யும் எண்ணெய் வகைகளில் ஒன்றையும் மன நல முதலுதவி பெட்டியில் இடம் பெற செய்யலாம். அத்தியாவசிய எண்ணெய்கள் பதற்றத்தை குறைக்கக்கூடியவை. மன அழுத்தத்தில் இருக்கும்போது அதன் வாசத்தை நுகரலாம். வாசனை தரும் மெழுகு வர்த்திகளையும் மன நல பெட்டியில் இடம்பெற செய்யலாம். மன கஷ்டத்தில் இருக்கும் சூழலில் இருள் சூழ்ந்த இடத்தில் மெழுகுவர்த்தியை எரிய வைத்து சிறிது நேரம் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

மன குழப்பத்திலோ, மன அழுத்தத்திலோ இருக்கும்போது ஷூ அணிந்து சிறிது தூரம் ஓடலாம். ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். நடனம் ஆடலாம். இந்த பயிற்சிகள் அனைத்தும் மனச்சோர்வுடன் தொடர்புடைய எதிர்மறையான எண்ணங்களை தகர்த்தெறிய உதவும்.ஷூ, மிதமான மனச்சோர்வை கையாள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
Tags:    

Similar News