செய்திகள்
ஐ.நா. சபை

ஐ.நா. சபையின் பெண்கள் ஆணைய உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- சீனா தோல்வி

Published On 2020-09-15 09:03 GMT   |   Update On 2020-09-15 09:40 GMT
பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிங் அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

நியூயார்க்:

ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் அமைப்பான பெண்கள் நிலை ஆணையம், பாலின சமத்துவம், பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வருகிறது.

இது ஐ.நா.வின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்தநிலையில் பெண்கள் நிலை ஆணைய உறுப்பினர் இடத்துக்கான தேர்தல் நடந்தது.

இதில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 54 இடங்களை பெற்று உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றன. சீனா தோல்வியை சந்தித்தது.

இதுதொடர்பாக சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிங் அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியா அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவத்தை உறுதிபடுத்தியதற்கு கிடைத்த வெகுமதி மற்றும் ஒப்புதல் ஆகும். இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜூன் 18-ந் தேதி ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா 8-வது முறையாக வெற்றி பெற்று தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News