செய்திகள்
கே.எஸ்.அழகிரி

ப.சிதம்பரத்தை சிறையில் அடைத்ததற்கு பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-11-29 10:08 GMT   |   Update On 2019-11-29 10:08 GMT
எந்தவித ஆதாரமும் இல்லாமல் ப.சிதம்பரத்தை சிறையில் அடைத்ததற்கு பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் பொறுப்பு வகித்த போது மே 2007 ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். ஊடக நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கான அனுமதியை பொருளாதார விவகார செயலாளர் தலைமையில் 6 செயலாளர்களைக் கொண்ட அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தான் வழங்கியது.

அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம் பரம் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் சாதாரண நடைமுறையின் கீழ் ஒப்புதல் மட்டுமே வழங்கியுள்ளார். ஏற்கனவே, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஒப்புதல் வழங்கியதைத் தவிர, இதில் இவருக்கு எந்த பங்கும் இல்லை.

ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் மீது தொடர்ந்து நாள்தோறும் கடுமையான விமர்சனக் கணைகளை தொடுத்து வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் பொய் வழக்கு போட்டு நூறு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

35 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 25 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்து 9 நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று நாட்டு மக்களிடையே நிலவிய வறுமையை விரட்டுவதற்குக் கடுமையான பணிகளை மேற்கொண்டவர் ப. சிதம்பரம். இவரைப் போலவே பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டிசில்வா 580 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

74 வயதான தொழிலாளர் கட்சியின் தலைவரான அவரை விடுதலை செய்ய வேண்டுமென பிரேசில் நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் எல்லோரும் குரல் கொடுத்தனர்.

பிரேசில் முன்னாள் அதிபர் லுலாவையும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் இன்றையச் சூழலில் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

ப. சிதம்பரம் சிறையில் 100 நாட்களை கழித்திருக்கிறார். ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இரண்டு விதமான விசாரணை அமைப்புகள். மத்திய புலனாய்வுத்துறை தொடர்ந்த வழக்கில் விடுதலை கிடைத்ததும், அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.


அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தின் ஆணைக்காக காத்திருக்கிறார். நீதிமன்ற நடைமுறைகளை பயன்படுத்தி விசாரணை என்ற போர்வையில் எவரையும் 100 நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம் என்கிற பழிவாங்கும் போக்கை கையாள்வதில் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் கிடைக்க வேண்டிய தீர்வுகள் காலம் தாழ்ந்து கிடைப்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்.

மலேகான் குண்டு வெடிப்பில் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாகூர் போபால் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் மோடியின் ஆசியோடு நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார்.

மிகப்பெரிய பயங்கரவாத குற்றத்தில் சம்மந்தப்பட்ட ஒருவரை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்து வகுப்புவாத அரசியல் நடத்தியவர் நரேந்திர மோடி இதற்கு உடந்தையாக இருந்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இத்தகைய போக்கு கொண்டவர்களின் ஆட்சியில் ப. சிதம்பரம் போன்ற நேர்மையாளர்களுக்கு அவ்வளவு சுலபமாக நீதி கிடைக்காது.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் சிறைச் சாலைகளை துணிவுடன் எதிர்கொண்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம் இத்தகைய எதேச்சதிகார தாக்குதலினால் மனம் சோர்ந்து விட மாட்டார். விரைவில் உச்சநீதிமன்றம் அவருக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறோம்.

ஆனால், இதுவரை விசாரணை என்ற போர்வையில் எந்தவித ஆதாரத்தையும் திரட்ட முடியாமல் 100 நாட்கள் ப. சிதம்பரம் அவர்களை சிறையில் அடைத்து வைத்ததற்கு நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உரிய பதிலைக் கூறாமல் தப்ப முடியாது. எனவே, ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கையுள்ளவர்கள் ப. சிதம்பரத்தின் விடுதலையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News