உள்ளூர் செய்திகள்
இந்திரகுமார், அஜித்குமார்

ஜவுளிக்கடை, ரெயில் நிலைய பார்க்கிங்கில் பைக்குகள் திருட்டு

Published On 2022-01-19 09:32 GMT   |   Update On 2022-01-19 09:32 GMT
வேலூர், காட்பாடியில் ஜவுளிக்கடை மற்றும் ரெயில் நிலைய பார்க்கிங்கில் பைக்குகள் திருட்டு தொடர்பாக ஆற்காட்டை சேர்ந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

வேலூர், காட்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 24), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந் தேதி பொங்கல் பண்டிகையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்காக குடும்பத்துடன் ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஜவுளிக்கடையின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். சிறிதுநேரத்துக்கு பின்னர் கார்த்திகேயன் வந்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வாகன நிறுத்துமிடத்தில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கடராமன் மற்றும் போலீசார் நேற்று காலை நேஷனல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், அந்த மோட்டார் சைக்கிள் திருடுபோன கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காந்திநகரை சேர்ந்த ஜவகர் மகன் அஜித்குமார் (23), ஆற்காடு பகுதி-2 வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்த குணசீலன் மகன் இந்திரகுமார் (24) என்று தெரிய வந்தது. 

இருவரும் வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளை கள்ளச்சாவி போட்டு திறந்து திருடி உள்ளனர். 

இதேபோல சாரதி மாளிகை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 பைக், மண்டித் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக், கொணவட்டம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக் திருடி உள்ளனர். காட்பாடி ரெயில் நிலையம் முன்பு உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் கள்ளச்சாவி போட்டு திறந்து ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.  அஜித்குமார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News