ஆன்மிகம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் சுவாமிக்கு பஞ்சாமிர்தம் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்ததை காணலாம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா

Published On 2021-02-12 08:42 GMT   |   Update On 2021-02-12 08:42 GMT
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா, 10-ம் திருநாளான நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் சுவாமி உருகுபலகை தரிசனம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள், பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், சிகைக்காய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் இலாமிச்சைவேர் சப்பரத்தில் சுவாமி சேர்மத் திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசை விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏரலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.
Tags:    

Similar News