லைஃப்ஸ்டைல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்

Published On 2020-11-30 08:25 GMT   |   Update On 2020-11-30 08:25 GMT
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் புன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின் வாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.

“புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின் உள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை வழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த நன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.

இவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.

“மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு இதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை சேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.

“நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.

அக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா, நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.

நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால் உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ் அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.

ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.
Tags:    

Similar News