செய்திகள்
கோப்புபடம்

கூடுதல் கொப்பரை கொள்முதல் மையங்கள்-உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Published On 2021-07-21 09:25 GMT   |   Update On 2021-07-21 09:25 GMT
தென்னை சாகுபடியாளர்கள் கடந்த 3 முறை அறுவடை செய்த தேங்காய்களை விலையில்லாததால் தோப்புகளில் இருப்பு வைத்துள்ளனர்.
காங்கயம்:

தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒவ்வொரு மாதமும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தற்போது தமிழகத்தில் தேங்காய் சீசன் உச்சத்தில் உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயத்துக்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

இது தவிர தேங்காய் பவுடர் விலை சரிந்ததால் கர்நாடகாவில் உற்பத்தியாகும் பந்து கொப்பரைகள் பொள்ளாச்சி, நெகமம் பகுதிக்கு உடைப்பு மற்றும் எண்ணை உற்பத்திக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆடி மாதம் என்பதால் வடமாநிலங்களில் தேங்காய், கொப்பரை மற்றும் ஆயிலுக்கு வரவேற்பு இல்லை. இதனால் அப்பகுதியில் கொள்முதல் செய்வது வெகுவாக குறைந்துள்ளது.

தென்னை சாகுபடியாளர்கள் கடந்த 3 முறை அறுவடை செய்த தேங்காய்களை விலையில்லாததால் தோப்புகளில் இருப்பு வைத்துள்ளனர். அதேபோல வியாபாரிகளும் கொள்முதல் செய்த தேங்காய்களை குவித்துள்ளனர். ஆடி பெருக்கு மற்றும் மழையால் விடுமுறை என்பதால் கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதன் காரணமாகவும் தேங்காய் மற்றும் கொப்பரை விலை மேலும் சரிய துவங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு கூறியதாவது:-

சரிந்து வரும் தேங்காய், கொப்பரை விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.103.35ஐ ரூ.150ஆக உயர்த்த வேண்டும். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் ஆதார விலையை கட்டாயம் உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அல்லது தமிழக அரசு கொப்பரை உற்பத்தியாளர் நலன் கருதி கூடுதலாக, ரூ.10 சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News