செய்திகள்
மழை

வளிமண்டல மேலடுக்கு காற்றில் சுழற்சி- தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக சாரல் மழை

Published On 2021-02-20 07:57 GMT   |   Update On 2021-02-20 07:57 GMT
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று 2-வது நாளாக ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. சென்னை கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கீழ்ப்பாக்கம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், புரசை வாக்கம், திருவொற்றியூர், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் இன்று அதிகாலையிலும், காலையிலும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

திருவண்ணாமலை சுற்றுப்புற கிராமங்களான அடி அண்ணாமலை, வேங்கிக்கால், அத்தியந்தல், ஆணாய் பிறந்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்தது.

வேலூரில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால் ஆபீஸ் போய்விட்டு வீட்டுக்கு திரும்பியவர்கள், ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்து சென்றனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்காற்று வீசியது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுக்குப்பம், தேத்தாம்பட்டு, கண்டியான்குப்பம், பேரூர், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணிநேரம் பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே அடுக்கி வைத்திருந்தனர்.

இன்று அதிகாலை பெய்த திடீர் மழையின் காரணமாக விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்தன.

இதேபோல் கூடலை யாத்தூர், எசனூர், குணமங்கலம், டி.ஆதிவராக நல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களின் வெளியே விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தாண்டிகுப்பம், புதுக்குப்பம், கண்டரகோட்டை, அண்ணாகிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது. இன்று காலையும் லேசாக சாரல்மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக வெயில் அடித்து வந்த நிலையில் இன்றும் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் அணை பகுதிகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்று அணை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசம், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

தென்காசி மாவட்டத்திலும் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் ஓடியது.

நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலான நிலவரப்படி சிவகிரியில் அதிகபட்சமாக 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோல் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நாளை (21-ந் தேதி) மற்றும் 22-ந் தேதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News