செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு கையேடு மற்றும் குறுந்தகடை பெண் ஒருவருக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கியபோது எடுத்த படம்

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது- அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

Published On 2018-05-17 03:50 GMT   |   Update On 2018-05-17 03:50 GMT
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#NationalDengueAwarenessDay #TNGovt #TNHM #Vijayabaskar
சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கலந்தாய்வு கூட்டமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த பயிலரங்கமும் நேற்று நடந்தது.

அப்போது காய்ச்சல் மேலாண்மை மற்றும் டெங்கு விழிப்புணர்வு கையேடு, குறுந்தகடுகளை டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டு குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று, காய்ச்சலின் காரணத்தை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து-மாத்திரைகள், ரத்த தட்டணுக்கள், பரிசோதனை கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளன.

காய்ச்சல் கண்காணிப்பு பணி 2,800 அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் காய்ச்சல் குணமடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ரூ.1.80 கோடி செலவிலும், கொசு ஒழிப்பு பணிகள் ரூ.13.95 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.#NationalDengueAwarenessDay #TNGovt #TNHM #Vijayabaskar
Tags:    

Similar News