செய்திகள்
போராட்டம்

சென்னையில் விவசாயிகள்- தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

Published On 2021-01-24 01:32 GMT   |   Update On 2021-01-24 01:32 GMT
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னையில் விவசாயிகள்-தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சென்னை:

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை சின்னமலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., இடது தொழிற்சங்க மையம் உள்பட தொழிற்சங்கங்கள் மற்றும் சுயாட்சி இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தோர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம், அ.சவுந்தரராஜன் ஆகியோர் பேசியதாவது:-

உள்நாட்டு போர் நடைபெறுவது போல் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சட்டத்தை நிறுத்தி வைக்க முடியும் என்றால், அதனை ரத்து செய்யவும் முடியும். எனவே, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் உரிய பிரிவுகளை சேர்த்து, விவாதித்து சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் இல்லாவிட்டாலும் விவசாயிகள் உழைப்பார்கள், பிழைத்துக் கொள்வார்கள்.

டெல்லியில் குடியரசு தினவிழா முடிந்ததும், ஒரு லட்சம் டிராக்டர்களுடன் 3 லட்சம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவார்கள். அன்றையதினம் நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடைபெறும். தமிழகத்திலும் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி அமைதியாக நடைபெறும். அதேவேளை டிராக்டர் உரிமையாளர்களுக்கு காவல்துறை வழங்கிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்' என்ற கோஷங்களுடன் கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டத்துக்கு பேரணியாக சென்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News