செய்திகள்
தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளதை படத்தில் காணலாம்.

கோடை கால சீசன் தொடங்கும் முன்பே விற்பனைக்காக குவிந்த தர்பூசணி பழங்கள்

Published On 2021-02-16 12:10 GMT   |   Update On 2021-02-16 12:10 GMT
கோடை கால சீசன் தொடங்கும் முன்பே ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்துள்ளன.
ராமேசுவரம்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்கள் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை ஒன்பது மணி வரையிலும் பனியின் தாக்கம் ஒருபுறமிருந்தாலும் அதன்பின்னர் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் மாவட்டம் முழுவதுமே பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த நிலையில் கோடை கால சீசன் தொடங்கும் முன்பே ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

இதுபற்றி தர்பூசணி வியாபாரி கர்ணன் கூறியதாவது, வழக்கமாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்து வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்த மாவட்டத்தில் அதிக மழை பொழிவால் தர்பூசணி செடிகள் நீரில் மூழ்கியதால் திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களை கொண்டு வந்து வியாபாரத்தை தொடங்கி உள்ளேன்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழம் இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தர்பூசணி பழத்தின் விலை அதிகரித்துள்ளது என்றார்.
Tags:    

Similar News