செய்திகள்
மைசூரு தசரா விழா(பழைய படம்)

மைசூரு தசரா விழாவுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு: எளிமையான விழாவுக்கு இவ்வளவு நிதி ஒதுக்குவதா? என சர்ச்சை

Published On 2020-09-15 02:13 GMT   |   Update On 2020-09-15 02:13 GMT
உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எளிமையாக நடைபெறும் விழாவுக்கு வழக்கம்போல் இவ்வளவு நிதி ஒதுக்கியது ஏன் என்றும், இது முறைகேடுக்கு வழிவகுக்கும் என்றும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மைசூரு :

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக 10-வது நாள் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். இதில் 750 கிலோ அம்பாரியை ஒரு யானை சுமந்து செல்லும். அதை பின்தொடர்ந்து மற்ற யானைகளும், கலை நிகழ்ச்சி குழுவினரும், அலங்கார ஊர்திகளும் செல்லும். இந்த ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது ஆடம்பரம் இல்லாமல் இந்த விழா நடத்தப்படுகிறது. 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, அரண்மனை வளாகத்தில் 5 யானைகள் பங்கேற்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. மேலும் இளைஞர் தசரா, விவசாய தசரா, பெண்கள், சிறுவர்கள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், மலர் கண்காட்சி, பொருட்காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ஒரு கலை நிகழ்ச்சி மட்டுமே நடத்தவும், இதில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தசரா விழாவுக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அதுபோல் தற்போதும் மைசூரு தசரா விழாவுக்கு ரூ.15 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. இது தற்போது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஏனெனில் இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. அதற்கு ரூ.15 கோடி செலவாகுமா? என்றும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளும், எளிமையாக நடைபெறும் தசரா விழாவுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது ஏன்?. இவ்வளவு நிதி, ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்ய ஒதுக்கப்பட்டு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.

இதுகுறித்து மாநில கூட்டுறவுத் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியும், தசரா விழா ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.சோமசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

எளிமையாக நடத்தப்படும் தசரா விழாவுக்கு எதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். தசரா விழாவுக்காக மட்டும் இந்த நிதியை அரசு ஒதுக்குவதில்லை. தசரா விழாவையொட்டி ஆண்டுதோறும் மைசூரு மாநகரில் சாலைகள் புதுப்பித்தல், அரசின் கட்டிடங்கள் சீரமைத்தல், பாரம்பரிய சின்னங்கள், தலைவர்களின் சிலைகள் புதுப்பித்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவும், தசரா விழாவுக்காகவும் இந்த நிதி செலவிடப்பட்டு வருகிறது.

எனவே, தசரா விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபாய் கூட தவறாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை. அதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். தசரா விழாவுக்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது கணக்கு விவரத்தை விழா முடிந்த பிறகு தெரிவிப்போம். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தசரா விழாவுக்காக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து சர்க்சை எழுப்ப கூடாது. உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா என்பதால், வழக்கம்போல் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News