செய்திகள்
போராட்டம்

எதிர்ப்பைமீறி டாஸ்மாக்கடை திறப்பு- மதுபாட்டில்களை உடைத்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2021-02-28 09:44 GMT   |   Update On 2021-02-28 09:44 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே டாஸ்மாக்கடையை மூட வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வடக்குத்து கீழூர் செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் டாஸ்மாக்கடையை திறக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே நேற்று மதியம் டாஸ்மாக்கடை திடீரென திறக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடை முன்பு ஒன்று திரண்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் டாஸ்மாக்கடையை உடனே மூடவேண்டும் என்று எச்சரித்தனர். ஆனால் கடை ஊழியர்கள் அதிகாரிகள் கூறினால் தான் மூடுவோம் என தெரிவித்ததால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

உடனடியாக டாஸ்மாக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை வெளியே தூக்கி வந்தனர். பின்னர் சாலையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத டாஸ்மாக்கடை ஊழியர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் கிராம மக்கள் டாஸ்மாக்கடையை மூடியே ஆகவேண்டும் என்று போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக்கடை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News