செய்திகள்
கோப்புபடம்

செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும் - ஏற்றுமதியாளர்களுக்கு ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

Published On 2021-10-11 04:49 GMT   |   Update On 2021-10-11 04:49 GMT
திருப்பூர் தொழில்துறையினர் செயற்கை நூலிழை கண்காட்சியை பார்வையிட்டு புதிய பாதையில் முன்னேற வேண்டுமென ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பருத்தி நூலிழை துணியை சார்ந்தே நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

மேலும் ஏற்றுமதி வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகர்களின் விருப்பம் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நூலிழை ஆடைகள் சர்வதேச சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

இந்தநிலையில் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,). கே.டி.எம்., மையம் அதற்கான வழிகாட்டுதலை வழங்கி வருகின்றன.

திருப்பூர் கே.டி.எம்., மையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை  நூலிழை ஆடைகள் மற்றும் பின்னலாடை துணிகள் கண்காட்சி தொடங்கியுள்ளது. எனவே திருப்பூர் தொழில்துறையினர் செயற்கை நூலிழை கண்காட்சியை பார்வையிட்டு புதிய பாதையில் முன்னேற வேண்டுமென ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. 

இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:

திருப்பூர் கே.டி.எம்., மையத்தில் செயற்கை நூலிழை ஆடை மற்றும் துணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையை செயற்கை நூலிழை ஆடைகள் தான் ஆக்கிரமித்துள்ளன.

பல்வேறு பன்னாட்டு சந்தைகளை சார்ந்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும். சர்வதேச அளவில் ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு செயற்கை நூலிழை ஜவுளி வர்த்தகம் நடக்கிறது.

இந்தியாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே உள்ளது. சர்வதேச சந்தைகளில் நமக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பருத்தி நூலிழை ஜவுளியை மட்டும் சார்ந்திருக்காமல் ஏற்றுமதியாளர்கள் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News