செய்திகள்
என்.வி.ரமணா

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்

Published On 2021-04-06 12:21 GMT   |   Update On 2021-04-06 12:21 GMT
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டே வருகிற 23-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

அதற்குள் புதிய தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும். பொதுவாக தற்போது இருக்கும் தலைமை நீதிபதி பரிந்துரைப்படி புதிய தலைமை நீதிபதியை நியமிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி புதிய நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யும்படி மத்திய அரசு, பாப்டேவிடம் கேட்டுக் கொண்டது. அவர் தனக்கு கீழ் முதன்மையாக உள்ள நீதிபதி என்.வி.ரமணா பெயரை பரிந்துரைத்தார்.

தலைமை நீதிபதியை ஜனாதிபதிதான் இறுதியாக நியமிப்பது வழக்கம். அதன்படி பாப்டேவின் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். அவர் என்.வி.ரமணாவை தலைமை நீதிபதியாக நியமித்து இன்று உத்தரவு பிறப்பித்தார்.

என்.வி.ரமணா ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர். அவர் 27.8.1957-ல் பிறந்தார். வக்கீலுக்கு படித்த அவர் 1983-ல் தன்னை வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.

பின்னர் ஆந்திர ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். 2000-ம் ஆண்டு ஜூன்மாதம் அவர் ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்ந்த அவர், இப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

என்.வி.ரமணா 48-வது தலைமை நீதிபதி ஆவார். அவர் 24-ந் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

Tags:    

Similar News