தமிழ்நாடு
.

சேலம் மாவட்டத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசாருக்கு கொரோனா

Published On 2022-01-23 06:54 GMT   |   Update On 2022-01-23 06:54 GMT
சேலம் மாவட்டத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அசுர வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

எனினும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,009 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்து புதிதாக 1,080 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 726 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 5 ஆயிரத்து 170 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 487 பேராக அதிகரித்து உள்ளது.  நேற்று சேலத்தை சேர்ந்த 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,734 பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு போலீசார், டாக்டர்கள், நர்சுகள் உள்பட பல அரசு ஊழியர்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு மாநகர் மற்றும் புறநகரில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News