செய்திகள்
முதியோர்

புதுவை உள்ளாட்சி தேர்தலில் முதியோருக்கு தபால் ஓட்டு- சட்ட விதிகளில் திருத்தம்

Published On 2021-10-04 05:29 GMT   |   Update On 2021-10-04 05:29 GMT
80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் ஓட்டு போட ‘13 சி’ படிவம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க சட்டமன்ற தேர்தல்போல 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் ஓட்டுப்போட மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் ஓட்டு போட ‘13 சி’ படிவம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு வார்டு வாரிய இவர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் அவர்களின் பெயர், முகவரி, மொபைல் எண் அடங்கிய தபால் ஓட்டு குறித்த விருப்ப படிவம் பூத் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பூர்த்தி செய்து பெறப்படும்.

ஓட்டுப்பதிவுக்கு முன் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் அலுவலர்கள் அடங்கிய குழு வாக்காளர் வீட்டுக்கே சென்று ஓட்டுகளை பெற்று தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பர். இதற்காக சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்படும்.

வாகனத்தில் சிறப்பு பார்வையாளர், 2 தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோ கிராபர், காவல்துறையை சேர்ந்த ஒருவர் இருப்பர். தேர்தலின்போது சட்டம்- ஒழுங்கை பராமரிக்க சிலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவர். இவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கவும் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News