செய்திகள்
தேவாலா அருகே வாலமூழா பகுதியில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் மழை வெள்ளம்

தேவாலாவில் பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்

Published On 2021-09-09 05:18 GMT   |   Update On 2021-09-09 05:18 GMT
ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலையில் இருந்தே கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு கூடலூர், பந்தலூர், பொன்னானி, தேவாலா, உப்பட்டி, கரியசோலை, நெலாக்கோட்டை பிதர் காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து பெய்த மழை இரவு வரை நீடித்தது. இந்த மழையால் கூடலூர் பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி, ஊட்டி- கூடலூர் சாலை, கூடலூர் நகர பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழையால் தேவாலா நீர்மட்டம் பகுதியில் திடீரென பாறைகள் உருண்டு வந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பாறைகளை அப்புறப்படுத்தி அருகே இருந்த பள்ளத்தில் போட்டனர்.

கூடலூர் நாடுகாணி பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.

மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

தேவாலா அருகே உள்ள வாலமூழா பகுதியில் ஆறு உள்ளது. தொடர்மழையால் இந்த ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேபோல் பந்தலூர் பஜாரில் மழை காரணமாக அங்குள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடியது. இதில் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News