செய்திகள்
திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்

Published On 2021-03-05 08:22 GMT   |   Update On 2021-03-05 08:22 GMT
திமுக கூட்டணியில் 4 தனித்தொகுதிகளையும், 2 பொதுத்தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடிதம் கொடுத்துள்ளது.
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும், மதவாத சக்தியை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற அடிப்படையில் தொகுதிகளை விடுதலை சிறுத்தை ஏற்றுக்கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் விடுதலை சிறுத்தை தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த விருப்பத்தை விடுதலை சிறுத்தைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 தனித்தொகுதிகளையும், 2 பொதுத்தொகுதிகளையும் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அல்லது வானூர், வேளச்சேரி அல்லது மயிலம், உளுந்தூர்பேட்டை அல்லது அம்பத்தூர் மற்றும் செய்யூர், கள்ளக்குறிச்சி, புவனகிரி, குன்னம் போன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, பொருளாளர் முகமது யூசுப், பனையூர் பாபு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு ஏற்ப தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, தலித் அல்லாத சமுதாயத்தினரும், போட்டியிடும் வகையில் பொதுத்தொகுதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.விடம் வலியுறுத்துவோம். இது தவிர 4 தனித்தொகுதிகளிலும் போட்டியிட தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News