உள்ளூர் செய்திகள்
பணம் மோசடி

மலிவு விலையில் பிரிட்ஜ் தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் மர்ம நபர்

Published On 2022-01-11 10:14 GMT   |   Update On 2022-01-11 10:14 GMT
மலிவு விலையில் பிரிட்ஜ் தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் மர்ம நபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:

துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட து.ரெங்கநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (35). இவருக்கு திருமணமாகி சுபா என்கின்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் அதே ஊரில் மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் செந்தில் கடையில் இருந்த பொழுது, டிப்டாப்பாக உடை அணிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் புல்லட்டில் வந்துள்ளார்.

அவர் பிரபல ஐஸ்கிரீம் கம்பெனியில் தான் பணிபுரிந்து வருவதாகவும், எங்கள் கம்பெனி சார்பாக  சோலார் மின் சக்தியில் இயங்கக்கூடிய குளிர்சாதன பெட்டியை ரூபாய் 15 ஆயிரத்துக்கு மலிவு விலையில் தருவதாக கூறியுள்ளார். மேலும் செந்திலிடம் ஒரு சில ஆவணங்களை காட்டி, தாங்கள் இறுதியாக ரூபாய் 9000 தந்தால் குளிர்சாதனப் பெட்டியை உடனே தந்து விடுவதாக கூறியுள்ளார். மோசடி வாலிபரின் பேச்சை உண்மை என நம்பிய செந்தில் 9000 பணத்தை கொடுத்துள்ளார். பிறகு துறையூரிலிருந்து சொரத்தூர் செல்லும் சாலையில் கிடங்கு இருப்பதாக கூறி செந்திலை ரெங்கநாதபுரம் கிராமத்திலிருந்து துறையூர் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது துறையூர் பஜார் பகுதிக்கு வந்தவுடன்  மோசடி நபர் செந்திலின் போட்டோ வேண்டும் என கேட்டுள்ளார். செந்திலிடம் போட்டோ இல்லாததால் அவரை திருச்சி சாலையில் உள்ள போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் இறக்கி விட்டு போட்டோ எடுத்து வருமாறு மர்மநபர் கூறியுள்ளார். இதனை நம்பிய செந்தில் போட்டோ எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர், மின்னல் வேகத்தில் புல்லட்டை எடுத்துக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார். இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின் பேரில் மளிகை கடைக்காரரை நூதன முறையில் ஏமாற்றி சென்ற மர்ம நபர் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News