ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2021-01-08 08:41 GMT   |   Update On 2021-01-08 08:41 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடை தயாரிக்கும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. பின்னர் வடை போடும் வகையில் ஒத்திகை நடைபெற்றது.
நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில் இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற 12-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது.

அதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்து படி அலங்காரம் நடைபெறும்.அன்று காலை 11 மணியளவில் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், திரவியம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.

ஒரு லட்சத்து 8 வடைமாலை தயாரிப்பதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆர்.கே.ரமேஷ் தலைமையில் 32 அர்ச்சகர் குழுவினர் நேற்று நாமக்கல் வந்தனர்.அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் 4 நாட்கள் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கிறார்கள்.

வடைகள் தயாரிப்பதற்காக 2050 கிலோ உளுந்தமாவு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டர் நல்லெண்ணை, 10 சமையல் எரிவாயு இணைப்பு கொண்ட அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வடை தயாரிக்கும் பணி நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. பின்னர் வடை போடும் வகையில் ஒத்திகை நடைபெற்றது.

இன்று காலை 5 மணி முதல் வடை போடும் பணி மீண்டும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வடை தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. வடை தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி நிறைவடையும். அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் இந்த வடை மாலை மதியத்திற்கு மேல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

அதன்பின் ஆயிரம் வடைகள் வீதம் சுவாமிக்கு சாத்தும் வகையில் 52 கோர்வைகள் உருவாக்கப்படும் என வடை தயாரிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வருகிற திங்கட்கிழமை முதல் கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதுடன் அனைத்து முன் ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News