செய்திகள்
தர்காவில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார்.

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-01-10 10:03 GMT   |   Update On 2020-01-10 11:59 GMT
சிறுபான்மை மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க. தான் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை:

மதுரை கோரிப்பாளையம் தர்காவில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று இந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோரிப்பாளையம் தர்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து அனைத்து மதத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நோய் நீங்குகிறது.

சிறப்புமிக்க இந்த தர்காவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகவும், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகவும் தர்கா வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.


இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுபான்மை மக்களுக்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தி.மு.க., மக்கள் மத்தியில் வி‌ஷமத்தனமான பிரசாரத்தை செய்து வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். அவருக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தி.மு.க.வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கூட புயலை கிளப்பலாம் என்று தி.மு.க.வினர் நினைத்தனர். ஆனால் அவர்கள் புஸ்வாணமாகி விட்டனர். வெளியில் புலி போல் பேசுகிறவர்கள், சட்டசபையில் பூனை போல ஆகிவிட்டார்கள்.

சிறுபான்மை மக்களின் நலன்பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க. தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.

இஸ்லாமியர்களின் நலனை பேணுவதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலமாக்களுக்கு ஓய்வூதியத்தை ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹாஜியார்களுக்கு தொகுப்பூதியம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக எடப்பாடியார் அரசு 5 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் அரிசி வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பரவை ராஜா, புதூர் அபுதாகீர், கே.வி.கே.கண்ணன், காஜா, பைக்காரா கருப்பசாமி, கலைச்செல்வம், கணேசன், டால்பின் அசோக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News