செய்திகள்
கமல்ஹாசன்-ரஜினிகாந்த்

கமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா?- பரபரப்பு தகவல்

Published On 2019-11-06 08:02 GMT   |   Update On 2019-11-06 08:02 GMT
கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் நாளை ரஜினி பங்கேற்பதாக வரும் தகவலை தொடர்ந்து தமிழக அரசியலில் இவர்கள் இருவர் தலைமையிலும் பலமான புதிய கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சுமார் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார்.  

தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

தனிக்கட்சி தொடங்கி  234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும், 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.

ஆனால் ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி மற்ற கட்சியினரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார். அடுத்த கட்டமாக குடிநீர் பிரச்சனையில் அவரது மக்கள் மன்றத்தினரின் பணிகளும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினி போல பல ஆண்டுகளாக இழுக்காமல் ஜெயலலிதா மறைந்த சில மாதங்களிலேயே தீவிர அரசியலில் கமல்ஹாசன் இறங்கினார். டுவிட்டர் மூலம் ஆட்சியை விமர்சித்தவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.



கமலுக்கு நகர்ப்புறங்களில் அதிகம் வாக்குகள் கிடைத்தது. எனவே கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கூட தனது அரசியலுக்கு பயன்படுத்தி வந்தார். ரஜினியும் கமலும் சினிமாவில் அறிமுகமானது முதலே நண்பர்கள். அரசியலிலும் அப்படி இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது.

கமல் பெற்ற வாக்கு சதவீதம், ரஜினிக்கு இருக்கும் நிர்வாகிகள் பலம், கிராமப்புற செல்வாக்கு இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த இருவருக்கும் பொதுவான நண்பர்கள், இருவரும் இணைந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ரீதியில் ஆலோசனை கூறி வருகின்றனர்.

இந்த வி‌ஷயத்தில் தொடக்கம் முதலே கமல்ஹாசன் ஆர்வம் காட்டுகிறார். சில பேட்டிகளில் கூட ரஜினி தனக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த வாரம் கூட ஒரு பேட்டியில் ‘நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரே மாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?’ என்று கேட்டதற்கு ‘அதை நாங்கள் இருவரும் அல்லவா பேச வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் பேசி முடிவுசெய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார். ரஜினி இவற்றுக்கு எந்த பதிலும் கூறவில்லை.

நாளை கமலின் பிறந்தநாள். இதையொட்டி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் வீடியோ போஸ்டர் வெளியிடப்படுகிறது. கமலின் பிறந்தநாளையொட்டி வரும் 17-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியிலும் ரஜினி கலந்துகொள்கிறார்.

ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவித்த விவகாரத்தில் கூட கமல் எந்த கருத்தையும் சொல்லவில்லை. மாறாக வாழ்த்து தான் தெரிவித்தார். தனக்கும் ரஜினிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் கமல் தெளிவாக இருக்கிறார்.

‘கமல்60’ நிகழ்வுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்தபோது, ‘உடனடியாக வருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். 17-ந்தேதிக்கு நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டதும் ‘அதனால் என்ன... எங்கு நடந்தாலும் எப்போதும் நடந்தாலும் கட்டாயம் வருகிறேன்’ என்று வாக்கு கொடுத்துள்ளார்.

எனவே இதை ரஜினி கமல் கூட்டணிக்கான தொடக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பார்கள். ஒருவேளை ரஜினி கமலுடன் கூட்டணி வைத்தால் அது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
Tags:    

Similar News