உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சின்னாறு பாலம் உடைந்ததால் பொதுமக்கள் அவதி

Published On 2022-01-15 08:43 GMT   |   Update On 2022-01-15 08:43 GMT
மாவட்டங்களை இணைக்கும் சின்னாறு பாலம் உடைந்ததால் பொதுமக்கள் அவதி
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் சின்னாற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த 2006&ம் ஆண்டு கட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த தரைப்பாலத்தை கடந்து வேள்விமங்கலம், வீரமநல்லூர் மற்றும் செந்தூறை வழியாக அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர்.

கடந்த வட கிழக்கு பருவமழையின்போது சின்னாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியதால் பாலம் பழுதடைந்தது. இந்த பாலம் வழியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு ஏற்றிவரும் அதிகனரக வாகனங்களும் பயணித்தன. மேலும் அரசு தனியார் பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ்களும் இந்த பாலத்தை கடந்து சென்று வந்தன.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென பாலத்தின் ஒரு பகுதி உள்வாங்கியது. தற்போது அந்த பகுதி உடைந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படவில்லை. மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை கடந்து யாரும் செல்லக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு, சாலையை மூடியுள்ளனர். இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

2 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான இந்த பாலம் மூடப்பட்டு விட்டதால் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமமடைவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், இந்த ஆற்றுப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டிட உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News