செய்திகள்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள்- கலெக்டர்களுடன் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை

Published On 2021-02-18 02:13 GMT   |   Update On 2021-02-18 02:13 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, அதற்கு ஈடாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறோம்.

கூடுதலாக அமைக்கப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களை கண்டறியும் பணி நடைபெற உள்ளது. மேலும், தேர்தல் அலுவலர்களை நியமிக்கும் பணி உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் பற்றி ஆலோசிக்க வேண்டும்.

எனவே 18-ந் தேதியன்று (இன்று) மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறோம்.

கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. அதை முறைப்படி செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை கண்காணிக்க ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் குறைந்தது 10 அல்லது 12 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News