செய்திகள்
மாணவிக்கு தெர்மல் பரிசோதனை

10 மாதங்களுக்கு பிறகு திறப்பு- தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர் வருகை

Published On 2021-01-20 07:09 GMT   |   Update On 2021-01-20 07:09 GMT
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர்கள் வந்திருந்தனர்.
திருச்சி:

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 506 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதில் விருப்பப்படும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம். அவர்களும் பெற்றோர் விருப்ப கடிதத்துடன் வரவேண்டும். வருகைப் பதிவு கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்பன போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக கூறப்பட்டு இருந்தன.

இருப்பினும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் சுயவிருப்பத்துடன் பெருமளவில் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். நேற்றைவிட இன்று இன்னும் கூடுதலாக மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறுகையில், அரசு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் 506 பள்ளிகள் திறக்கப்பட்டன.

10-ம் வகுப்பில் நேற்றைய தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 79 சதவீத மாணவர்களும், மெட்ரிக் பள்ளிகளில் 52 சதவீத மாணவர்களும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 51.50 சதவீத மாணவர்களும் வந்தனர்.

இதேபோன்று பிளஸ்-2 வகுப்பில் அரசு பள்ளிகளில் 76.5 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 78 சதவீத மாணவர்களும், மெட்ரிக் பள்ளியில் 44 சதவீத மாணவர்களும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 40 சதவீத மாணவர்களும் வந்திருந்தனர். குறிப்பாக 49 பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது.

பொதுவாக 80 முதல் 82 சதவீத வருகை பதிவு இருக்கும் சூழலில் கொரோனா காலத்திலும் 71 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வந்திருப்பது பெருமை படத்தக்கது. அடுத்தடுத்த நாட்களில் சகஜ நிலை ஏற்படும். மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி கற்கும் நிலை உருவாகும் என்றார்.


Tags:    

Similar News