செய்திகள்
மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் கனமழை- அறுவடைக்கு தயாரான 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதம்

Published On 2021-01-13 08:46 GMT   |   Update On 2021-01-13 08:46 GMT
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கனமழை நீடித்தது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள கிராமங்கள் தனித்தீவானது. இதனால் மக்கள் கடும் சோகத்தை சந்தித்தனர். தற்போது மழை வெள்ளம் வடிந்துள்ளது.

இந்த சோகத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்குள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

ஒரே நாளில் பரங்கிபேட்டை, கொத்தவாச்சேரி பகுதியில் தலா 28 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது.

கனமழையால் குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குமராட்சி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது.

நெல்மணிகள் அனைத்தும் தரையோடு தரையாக சாய்ந்து கிடப்பதால் அவை முளைக்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

குமராட்சி அருகே உள்ள நலன்புத்தூர் கிராமத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன. ஒருசில வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதுதவிர ஸ்ரீமுஷ்ணம், புதுகுளம், எசனூர், கொக்கரசன்பேட்டை, குணமங்கலம், நகரபாடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெலாந்துரை வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது 3000 கனஅடி நீர் வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது. எனவே பாதுகாப்பு கருதி வீராணம் ஏரிக்கு வரும் 3000 கனஅடி உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

இதனால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஏற்கனவே கடந்த மாதம் புயல் மழையால் வீராணம் ஏரி கரையோர மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். தற்போதும் தொடர்மழை பெய்துவருவதால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News